Monday, March 7, 2011

உழவன் விடுதலை, உலகின் விடுதலை


இந்த நாட்டின் உயிர் அதன் ஊர்களில் துடித்தது. மனிதர்கள், அவர்களோடு துள்ளிவரும் ஆடு மாடுகள், நாய் பூனைகள். மரங்களும் பயிர்களும் செழித்த வயல் வெளிகள். மரவெளியின் பறவைகள். சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பாம்புகள், பூரான்கள் என எத்தனைப் பூச்சிகள், உயிர்வகைகள். கண்ணுக்கு தெரிகிற தெரியாத அத்தனை உயிர்வகைகளையும் தாயாய் அரவணைத்து மகிழ்ந்து கோடிக்கணக்கான அத்தனை உயிர் வகைகளுக்கும் உணவூட்டி மகிழ்வித்தவள் இந்த இயற்கை அன்னை. ஆனால் இயற்கை அன்னை இன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள். எப்படி?

அறக்கட்டளை என்ற பெயரில் நடந்த உளவும் பசுமைப்புரட்சியும்

நாடு 1950இல் குடியரசானது. 1952இல் நாட்டில் நுழைந்தது இராக்பெல்லர் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் இரண்டு தனியார் அமைப்புகள். இந்திய வேளாண்மை பற்றி நாடு முழுவதும் ஆழ்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டன. அமெரிக்க வேளாண் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள் ஆகியவற்றைக் காண அரசியல் வாதிகள் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வேளாண் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கவும், உதவித் தொகையுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்க அறக்கட்டளைகள் வேளாண் பல்கலைக் கழகத்துடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டன. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெறத் தேர்ந்தெடுக்கபட்ட பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஊடகங்கள் தீவிர வேளாண்மைப் பற்றியும், அமெரிக்கப் பண்ணைகளில் எந்திரமயம் மூலம் நடக்கும் அதிசயங்கள் பற்றியும் குளிரக்குளிரப் பாடின. அமெரிக்காவில் நடக்கும் அதிசயம் பற்றிக் கண்டு களித்து வந்த அரசியலர் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். அமெரிக்க உதவியுடன் படித்து பட்டம் பெற்று வந்தவர்கள் 'அறிவியலின் அற்புத சாதனைகள்' பற்றி ஆணித்தரமாகப் பேசினார்கள். அறக் கட்டளைகள் 15 ஆண்டுகளையும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் கொட்டிச் செய்த ஆய்வுகள் என்ன தெரியுமா?

(1) குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செய்து மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது

(2) உழவர்களின் பயிரிடும் முறையை மாற்றி இரசாயன உரங்கள், மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது. 1965, 1966 ஆகிய ஆண்டுகளில் பருவ மழை சரியில்லை. உடனே பெரிய பிரசாரம் தொடக்கப்பட்டது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் பட்டினிக் கொடுமைகளும் பெரிய அளவில் நிகழ உள்ளதாக வதந்திகள் பரப்பபட்டன. வர இருக்கும் கொடுமையான பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய அரசு அமெரிக்க அரசினர் 'பசுமைப் புரட்சி" என்ற பெயரில் பரிந்துரைக்கும் அதீத இரசாயன வேளாண்மையைக் கைக்கொள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தது. அப்போதைய வேளாண் அமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

காடுகளின் அழிவு

காலனி ஆதிக்கத்தின் போது மலைகளில் இருந்த உயரமான மரங்கள் வெட்டப்பட்டு காப்பி, டீ, இரப்பர் மற்றும் மணப் பொருட்கள் பயிரிடப்பட்டன. இதனால் மலைப்பரப்பில் இருந்த பெரிய சூரிய அறுவடைப் பசுமை அழிந்தது. பெய்யும் மழை அளவும் குறைந்து போனது. அதீத நில அரிமானம், நிலச்சரிவு போன்றன மலைகளின் வளமையைக் குறைத்தன.

தோட்டங்கள் போக எஞ்சியுள்ள காடுகளும் முறையாக காக்கப்படாமல் திருட்டு மர வணிகர்களால் அழிந்து வருகின்றன. சட்டவிரோதமான முறையில் காட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவதும் காடுகளின் பரப்பளவைக் குறைக்கின்றது.

பல்வகையான செடிகொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், சிற்றுயிர்கள், நுண்ணுயிர்கள் என விரிந்து பரவும் உயிரினங்கள் ஈடு செய்ய முடியாத செல்வங்கள். இவற்றின் அருமை புரியாதவர்களாய் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

ஆற்றுப் படுகைகள்

செழுமையான மழை, காடுகளின் கனத்த உலர்சருகு மற்றும் மக்குகள் வழியே வழிந்தோடும் போது மக்கு உரங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கின்றது. மழை நீர் ஆறுகளின் வழியே ஓடி படுகைகளில் சுமந்து வந்த உரங்களைப் படியச் செய்கின்றன. படுகைகள் இவ்வாறாக ஊட்டச் சத்துக்கள் பெறுகின்றன. ஆனால் இன்றோ காடுகள் குறைந்து போன நிலையில் மழையும் குறைந்தது. மக்குகளும் குறைந்தன. இருக்கின்ற மக்குகளும் கட்டப்பட்டுள்ள குறுக்கணைகளில் சிறைப்பட்டு விடுகின்றன.

மானாவாரி நிலங்களை ஒதுக்கிய பசுமைப்புரட்சி

15 ஆண்டுகளாக இந்தியாவை ஆய்வு செய்த அமெரிக்க அறக்கட்டளைகள்

1967இல் 'பசுமைப் புரட்சி' பற்றிய அறிவிப்புடன் வளமிக்க, நிறையத் தண்ணீ­ர் வசதியுள்ள நதிப் படுகைகளில் புதிய குட்டை இரக நெல், கோதுமைப் பயிர்களைப் பயிரிடத் தொடங்கி வங்கிக் கடன், கொள்முதல் நிலையங்கள் என அரசின் கவனம் இரண்டு பயிர் வகைகளைத் தாங்கிப் பிடித்தன. ஆனால் நாட்டின் 75 விழுக்காடு மானாவாரி நிலங்கள் பசுமைப் புரட்சியின் வளையத்திற்கும் கொண்டு வரப்படவில்லை. மானாவாரிப் பயிர்களுக்குக் கொள்முதல் நிலையங்களும் இல்லை. புறக்கணிக்கப்பட்ட இந்தப் பகுதியில் விளையும் சிறுதானியங்கள் என அழைக்கப்பட்ட புன்செய் தவசங்கள்தான் மிகுந்த சத்துகள் கொண்டது. நாட்டின் அனைத்து மக்களின் உணவுக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியது. மழைநீரை முறையாகச் சேமிக்கத் தமிழ் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரி குளங்களை நன்கு பராமரித்து உழவர்களுக்கான ஏந்து திட்டங்களை நடத்த அரசு தவறியது.

அறிவியல் சாதனை என்ற பெயரில் வணிகச் சூது

வேளாண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பட்டறிவு கொண்ட சமுதாயத்தின் நடைமுறைகள் பத்தாம்பசலித்தன மானவை என்று மக்களை நம்ப வைத்துப் பரந்த நாட்டின் உழவுத் தொழிலின் இடுபொருட் சந்தையைப் பன்னாட்டுக் குழுமங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது பசுமைப் புரட்சி. உரம், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், விதைகள், பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி, ஆழ்குழாய்க் கிணறுகள், நீர்மூழ்கி மின் இறைவைகள், நெகிழிக் குழாய்கள், சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள், உழுபடை எந்திரங்கள், கதிரடிக்கும் எந்திரங்கள், கதிர் அறுக்கும் எந்திரங்கள், நடவு எந்திரங்கள் போன்ற வணிகப் பெருக்கத்திற்கு வழிகோலிய பசுமைப் புரட்சியின் அடிப்படைகள் வேளாண் அறிவியலுக்கு அறவே விரோதமானவை. இந்த வணிகச் சூதிற்குத் துணைநின்ற அரசியலர், வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் பட்டதாரிகள் இந்த நாட்டிற்கும் உழவர்களுக்கும் செய்த துரோகம் கண்டிக்கத்தக்கது.

வேதியல் உரங்களின் கேடு

மண் என்பது பயிர்களின் வேர்த் தொகுதியைத் தாங்கி நிற்கும் இடம் மட்டுமே என்றும் பயிர்களுக்கான ஊட்டங்கள் தாங்கள் பரிந்துரைக்கும் வேதியல் பொருட்களில்தான் உள்ளதாகவும் பசுமை வணிகத்திற்கு விலைபோனவர்கள் கூறுவது அறவே அறிவியலுக்கு முரணான பொய்.

கோடானுகோடி உயிர்களின் தாய் மண். போட்டியும் ஒத்துழைப்புமாகச் செழிக்கும் இந்த உயிர்கள் ஒரு சங்கிலி போல. தனித்தன்மை கொண்ட இந்த உயிர்கள் நடத்தும் கூட்டுவாழ்வில்தான், உயிர்ப் பன்முகத் தன்மையில்தான் உயிர்களின் இருப்பும் நீட்டிப்பும் உள்ளன. இயற்கை அன்னை பெரிய உணவுக்கிடங்குகள் கட்டி, எல்லா உயிர்களுக்கும் தினந்தோறும் உணவு பங்கீடு செய்வதில்லை. ஒன்றன் கழிவு மற்ற உயிரின் உணவு என்பதுதான் இயற்கையன்னையின் உணவு நியதி. உயிர்ப் பன்முகத் தன்மைதான் உணவுப் பங்கீட்டின் விதி. இந்த இரண்டு அடிப்படை உண்மைகளையும் புறக்கணித்து இயற்கையை நாசப்படுத்தியது பசுமைப் புரட்சி.

இட்ட வேதியல் உரங்களில் பெரும்பகுதி பயிரால் உறிஞ்சப்படுவதில்லை. அது நிலத்தடி நீரிலும் வடிகால் நீரிலும் கரைந்து பரவி சூழற் கேடாக மாறுவதோடு நிலத்தின் சிற்றுயிர் நுண்ணுயிர்களையும் அழிக்கின்றது. இயற்கையின் இருப்பாக இருக்கும் சங்கிலி வளையக் கண்ணிகளை உடைப்பது பல தொடர்விளைவுகளை உண்டாக்க வல்லது. இது பற்றிய உண்மைகளை அறவே மறைத்தனர் பசுமைப் புரட்சியின் காவலர்கள்.

பூச்சிக் கொல்லி - களைக் கொல்லிகளின் கெடு

பூச்சி - களைக்கொல்லிகள் கடுமையான நச்சுப் பொருட்கள். பூச்சிகளை மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் கொல்லும் அபாயமான வேதியல் பொருட்கள். இயற்கையில் வாழும் எந்த உயிரினமும் இதனை உள்வாங்கிச் செரிக்க முடியாது. நல்ல பாம்பின் விசத்தைக் கூட நம்மால் செரித்து விட முடியும். மேலும் இயற்கையாலும் சிதைக்கவோ மக்க வைக்கவோ முடியாத இந்த நச்சுகள், நீர், மண் வழியாகப் பரவி, உண்ணும் உணவில் உறிஞ்சப்பட்டு மனித உடலின் கொழுப்பில் கரைந்து செமிக்கப்பட்டு மனிதர்களுக்குக் கடும் நோய்களை உருவாக்குகின்றன. இன்றைய நிலையில் பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் உயிர் இழப்பும் பொருள் இழப்பும் பன்மடங்காகப் பெருகியுள்ளன. பன்னாட்டுக் குழுமங்கள் ஆய்வுக் கருவிகள், மருந்துகளையும் விற்க மேலும் ஒரு புலம் உருவாகியுள்ளது.

மண், நீர், சூழல், உண்ணும் உணவு நஞ்சானது

தன்னுள் கலந்த அன்னியப் பொருட்களைச் செரித்து உள்வாங்கும் மண்ணும் நீரும் அளவு கடந்து கொட்டப்படும் செரிக்க முடியாத நச்சுகள், நெகிழிகள் போன்றவற்றால் மூச்சுத் திணறுகின்றன. காற்றில் விடப்படும் அதீதப் புகைகள் வளிமண்டலத்தையே மாசுபடுத்தி சூழல் விபத்தாக உருவெடுக்கின்றன. கொடும் சூறாவளிகள், பெருவெள்ளங்கள், புயல்கள், உயரும் கடல்மட்டம் என மனித குலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நிலையில் உள்ளன. மாசுபட்ட காற்று, நீர், மண் ஆகியன உண்ணும் உணவை நஞ்சாக்குகின்றன. இவை போதா என்று உலகை ஆதிக்கம் செய்யச் சதி செய்யும் மான்சாண்டோ குழுமம் பரப்பும் மரபீனி மாற்று விதைகளால் மனித உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு பயங்கரமாக இருந்து வருகிறது.

இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மிக்க ஆர்வத்துடன் இந்திய அரசுக்கு உதவிய அமெரிக்கக் கட்டளைகள் மனித அலைகளை மட்டுப்படுத்தத் திட்டங்களைச் செயல்படுத்தின. மறைமுகமாகக் கொல்லும் பூச்சிக் கொல்லிகளும் மக்கள்தொகையைச் சத்தமின்றி குறைக்கின்றன.

பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், மனிதர்களைத் தாக்கும் நோய்கள்

பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் புழு பூச்சிகளை உண்ணும் பூச்சிகளையும் கொல்கின்றன. பூச்சிகளைத் தின்று வாழும் பறவைகளையும் பாதிக்கின்றன. பயிர்களைத் தின்னும் பூச்சிகள், அவற்றை உண்ணும் மனிதனுக்கு நன்மை செய்யும் பூச்சிகள், மக்க வைக்கும் உயிரிகள், பறவைகள் ஆகிய பல்வகை உயிரினங்களுக்கு இடையே உள்ள இயற்கைச் சங்கிலி உறவை அழிக்கின்றன. சமநிலை அற்றுப்போன இயற்கையில் பூச்சிகள் கடுமையாக வளர்வதைத்தான் காண்கிறோம். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு பூச்சிகளின் வளர்ச்சியில்தான் முடிந்துள்ளது. இத்தகைய ஒரு பாதகத்தைச் செய்தவர்கள் நுண்ணறிவும் தொலைநோக்கும் சிறிதும் இல்லாத மனிதநேயமே அற்ற வணிகர்கள் என்பதே தெளிவாகிறது.

வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகள் பாரம்பரிய முறையில்...

கரிகாலன் கட்டிய கல்லணையும் பாசன வாய்க்கால்களும் இராசேந்திர சோழன் அமைத்த வீராணம் ஏரியும் ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் உயிர்காக்கும் அமைப்புகளாக நிற்கின்றன. தமிழ் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகள், குளங்களை விட கடந்த ஆயிரம் வருடங்களில் செய்யப்பட்ட பெரிய முன்னேற்றங்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது.

மன்னர் கால நீராதாரங்களின் மீது நடத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இக்கால மன்னர்கள், மீட்க வேண்டும். பொதுப் பயன்பாட்டுக் குளங்கள் மழை நீர் சேகரிப்பு, நீர் சிக்கனம், இயற்கைமுறையில் நீர்த் தூய்மை, மறு சுழற்சி ஆகியவைகளுக்கு நம் முன்னோர்களின் நிலைத்த, நீடித்த வாழ்முறைக்குச் சான்றுகள். மின்சக்தியை மையப்படுத்தும் நீர்ப் பயன்பாட்டு முறைகள் நீடிக்க மாட்டா. இப்பொழுதே நம் மின் நிலையங்களுக்கு வேண்டிய நிலக்கரியை ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆப்பிரிக்க நிலக்கரியும் வறண்டு போனால் என்ன செய்வது? ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகள் பசுமைப் புரட்சிக் காலத்தில்

ஆறுகளைச் சிறைப் பிடிக்கும் அவலக் காலம் இது. அவற்றை மீட்க அனைத்து வகையிலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு வடிநிலத்திலும் மழைநீர் வெளியேறி ஓடுவதைத் தடுத்து ஏரி, குளங்களில் தேக்கவும், நிலத்தடி நீராகச் சேமிக்கவும் தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும். குறைந்து கொண்டே போகும் நிலத்தடி நீர்மட்டமும், நிலத்தடி நீரில் அதிகரிக்கும் அதீத உப்பும் மனித உடல்நலனையும், வேளாண்மையையும் அச்சுறுத்தும் பெரிய சக்திகள். இதனை வெல்ல மழைநீர் சேகரிப்பும் நிலத்தடி நீராக உட்புகுத்தலும் இன்றியமையாதவை.

ஏற்கெனவே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், போத்தல் நீர் வணிகம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் இந்தியாவை பெருஞ்சந்தையாக்கக் துடிக்கின்றன.

உயர்ந்துபோன இடுபொருட்களுகளும் சக்தி உள்ளீடுகளும்

பசுமைப் புரட்சி கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் பாரம்பரிய வேளாண்மையைப் பின்னுக்குத் தள்ளி விட்டது. உரம், பூச்சி, களைக் கொல்லி, விதைகள், பயிர் ஊக்கிகள், எந்திர உழவு, நடவு, அறுவடைச் செலவுகள் என இடுபொருட்செலவுகளை உழவனின் தலையில் சுமத்தியுள்ளது. உழவுத் தொழிலுக்கான பெட்ரோல், டீசல், நிலக்கரி, மின்சாரம் ஆகிய தேவைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. அரசாங்கம் உரக் கம்பெனிகளுக்கு தரவேண்டிய மானியம, சொட்டுநீர் கருவிகள் போன்ற இதற மானியச் செலவுகள், மின்சார நிலையங்கள் அமைக்கத் தேவையான முதலீடுகள், உள்கட்டுமானங்கள் என தேவைகள் விரிவாக்கப்படுகின்றன. பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆடுகளம் அமைப்பது அரசின் வேலையாகப் போய் விட்டது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய உழவன் செலவிடும் தொகை, அரசு செலவினங்களின் தொகை ஆகியவைகளை தொகுத்து வெளியிட அரசு முன்வருமா? உழவனின் உற்பத்திக்குக் கிடைக்கும் விலை நியாயமில்லை என்பதை அரசு உணருமா?

இடுபொருட்களில் உழவர்களை உறிஞ்சும் பன்னாட்டுக் குழுமங்கள், உழவனின் விளை பொருட்களுக்குரிய விலையை எப்போதும் குறைத்தே வைத்துள்ளன.

பன்னாட்டுக் குழுமங்களின் வேட்டைக் காடு

உழவர்கள்தாம் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளால் பெருத்த நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். அறுவடைக்குப் பின் பதப்படுத்தல், உணவுப்பொருட்களின் கொள்முதல், சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் வால்மார்ட், ஏடிஎம் போன்ற உலகமகா நிறுவனங்கள் குதிக்கின்றன. விதைத் துறையில் இந்திய உழவுத் தொழிலையே தன் காலடியில் கொண்டுவர மான்சாண்டோ நாட்டைச் சுற்றிவளைக்கின்றது. சக்திகள் துறையில் பல்வேறு நிறுவனங்கள். உழவனின் நிலங்களைக் கையகப்படுத்தச் செயல்படும் நிலத் திமிங்கலங்கள். மொத்தத்தில் இந்தியா சூழப்பட்ட ஒரு வேட்டைக்களமாகியுள்ளது.

அழியும் வேளாண்மை, புலம்பெயரும் உழவர்கள், குறையும் உற்பத்தி

உழவு சுமக்க முடியாத ஒரு தொழிலாகி விட்டது. வளமான நிலங்களில் கூட உழவு கட்டுப்படியான ஒரு தொழிலாக இல்லை. உழவுத் தொழிலாளிகள் தொடர்ந்து சிறு பெரு நகரங்களுக்கும், திருப்பூர், கேரளா என்றும் சென்ற வண்ணம் உள்ளனர். ஊரில் எஞ்சும் தொழிலாளர்களை 100 நாட்கள் வேலைத் திட்டம் என்ற பெயரில் அரசாங்கமே முன்னின்று உழவுத் தொழில் சாராத வேலைகளுக்கு திருப்புகின்றது. முக்கியமாக உழவுப் பணிகள் மும்முரமாக நடக்கும் நேரத்தில் தொழிலாளர்களை மடைமாற்றுவது உழவுத் தொழிலைக் கொல்லும் ஓர் முயற்சியாக உள்ளது. 100 நாட்கள் வேலையை அரசு கொண்டுவந்த பிறகு வேலைத்திறன், ஒருவர் செய்யக் கூடிய வேலையின் அளவு பற்றிய கருத்துக்கள் உழவனுக்கு எதிராக உருவெடுக் கின்றன. ஆனால் கூலி மட்டும் உயர்ந்து கொண்டே போகின்றது. உழவடைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத உழவன் செய்யும் உழவு வேலைகளைச் சுருக்கிக் கொள்கின்றான். நிலங்களைத் தரிசு போடுவது, நிரந்தரப் பயிர்களாக மாற்றுவது, ஆடு மாடுகள் வளர்ப்பதைக் குறைத்துக் கொள்வது, கட்டுமனைகளாக மாற்றி விற்று விடுவது, குத்தகைக்கு விட்டுவிட்டு நகர்நோக்கிச் செல்வது போன்ற போக்குகள் உழவர்கள் மத்தியில் வளர்கின்றன.

இவையனைத்தும் வேளாண் பொருள் உற்பத்தியின் அளவு, பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கடுமையாகப் பாதிக்கின்றன. நாடு உணவு நெருக்கடியை நோக்கித் தள்ளப்படுகின்றது. ஆள்வோர் உழவர்களின் குரலைப் பொருட்படுத்துவதாக இல்லை.

பசுமைப் புரட்சியின் தோல்வியும், அமெரிக்காவின் புதிய பசப்பல்களும்

அமெரிக்காவோடு ஊடாடி மன்மோகன் சிங் பேசும் இரண்டாவது பசுமைப் புரட்சி, அதிபயங்கரமான ஒன்று. நாட்டின் எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களை அழித்து நூறு கோடி மக்களைக் கொத்தடிமைகளாகப் பன்னாட்டுக் குழுமங்களின் தொழுவத்தில் கட்டும் பெரும் சூது.

இயற்கை வேளாண்மை மூலம் இயற்கையின் சக்திகளை மீட்டெடுப்பதும், மழைநீர் சேகரிப்பும்தான் சரியான மாற்றுத் திட்டம். மரங்களையும் கால்நடைகளையும் பெருக்குவதே தேசிய பெருங்கடமை என நாம் கொள்ள வேண்டும்.

மரபீனி மாற்று மான்சாண்டோவின் கொடுஞ்சூது

மானசாண்டோவைப் புறக்கணிப்போம். நாட்டின் விடுதலையைக் காப்போம்.சிதைந்து போன உட்கட்டமைப் புகளைப் புனரமைப்போம். மேன்மைப் படுத்துவோம்.மண், நீர், காற்று, சூழல் தூய்மை காப்போம்.சுயசார்பு ஊரகங்களைக் கட்டுவோம். ஊரக மக்களின் தேவைகளை அவர்களே உற்பத்தி செய்ய வழிகாண்போம்.

தமிழக உழவர்களின் சாதனை உலகையே குலுக்கட்டும். உழவன் விடுதலை உலகின் விடுதலை!

No comments:

Post a Comment