Tuesday, March 29, 2011

என் விதியின் பாதையில்


அன்பே உன்னை சந்தித்தேன்
என்னை சிந்தித்தேன்..
உன் பார்வை சீண்டிட
என் மனம் தடுமாறிட..

கனவுகள் எனக்குள்
கருக்கொண்டது..
கருவுற்ற கனவுகளும்
வளர்ந்திட தோன்றிய
கனவு நிஜமாகியது...

காலங்கள் கரைந்தது
விதி தேவன் விளையாட
நம் வாழ்வு திசை மாறிட
வாழ்வெனும் பாதையே
வெறுமையாய் ஆனது

நீ அங்கே தனிமையிலே
நான் இங்கே தனிமையிலே
சந்திப்பே இல்லாத
சந்தர்ப்பம் சூழ்ந்திட

காலங்கள் காற்றுபோல்
வேகமாய் சுழன்றது
உன் வாழ்வு
திசை மாறிடவும் ஆனதடி

உன் உறவுகளின் அதட்டலால்
மனதை நீ கல்லாக்கினாய்
என நானறிவேனடி
உறவுகளுக்காய்
உன்னை நீ மறந்தாய்
புதியவளாய் புது உறவில்
இணைந்திட்டாயடி...

கனவுகள் கரையேறுமென
காத்திருந்தேன்
கனவினை களைந்து
என் ஆசைகளை
கானல் நீராக்கியது விதி

உன் நினைவுகளை
எனக்குள் சிறைவைத்து
என் சுவாசமே நீயென
வாழ்கிறேன் நானடி...!

உன் பிழை ஏதடி
இறைவன் அவன்
திருவிளையாடலடி...

குருதி தோய்ந்த எம் இனம்

பார்க்க முடியவில்லை
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே

தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.

சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...

அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?

பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..

கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...


My life



பாலுமின்றி பாலகர்கள் பசியில் துடிக்க சுதந்திரம்...
வேண்டுமென்று உயிர்கொடுக்க ஒருபுலத்துத் தமிழர்கள்...
பாலையூற்றி சூடம்காட்டி ஓடவேண்டும் எந்திரன்.
இல்லையென்றால் உயிர்துறக்க இன்னும் சில தமிழர்கள்

புலம் பெயர்ந்தும் குலம் மறவா மொழிகலவா தமிழ் பேசி..
தமிழ் இனத்தின் தனித்துவத்தை மகத்துவமாய் சிலர் பேண...
புலத்திலுள்ளோர் அயல்மொழியை இடைசெருகித் தம்பெருமை...
அனுதினமும் உயர்ந்திடவே பெரும்தவத்தை செய்கின்றார்..

அடிக்கு மேல் அடி வாங்கி அடி மேல் அடியெடுத்து.
அடி பிசகா இலட்சியத்தின் பாதை வென்றோர் ஒருபுறம்..
அடிமையாய் எருமையாய் வெறுமையாய் அடிவருடி.....
மடியேந்தி கோடி சேர்த்து வயிறு வளர்ப்போர் மறுபுறம்

எக்களிப்பார் கொக்கரிப்பார் கொதித்தெழுந்தால் சவுக்கடிப்பார்..
போராட்டம் போதுமென்று.. தமைத் தாமே காத்துக் கொள்வார்..
தமிழன் என்ற போர்வையிலே அவர்க்கெதிராய் சில ஈழவர்.....
தீக்குளித்தார் தமை அழித்தார்.. போராட்டம் வேகம் பெற
அச்சாரமாய் தமை அளித்தார்.. அண்டை நாட்டில் வாழ்ந்தாலும்
ஆழ நினைத்துப் பார்க்கையிலே ஈழத்தவரிலும் மேலவர்

நாற்று நட்டு களை பறித்து நாற்றங்களைப் புறக்கணித்து
வெட்டைவெளிப் பொட்டல்களில் கட்டுடம்பைக் காயவிட்டு
நாட்டு மக்கள் நலம் செழிக்க தனையுருக்கும் தொழிலாளி....
வேற்று நாட்டு காசு பார்க்க மாற்றான் தோட்ட மலர்கள் விற்று...
வீட்டு மக்கள் செல்வம் காண மற்றவரை வாட்டிக் கொன்று
சிதை வரையில் வதை வதைக்கும் இரக்கமற்ற முதலாளி...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


உன்னைப்பாட உவமை தேடினேன்
அடடா உனக்குத்தான் ஒப்பீடு பிடிக்காதே
கண்ணைமூடிக் கவிதை பாடிநேன்
அடடா உனக்கென்னைக்
கவிஞ்ஞனாய்ப் பிடிக்காதே

பெண்ணெண்று தமிழ்ப்
பெருமைகள் சூடினேன்
மண்ணாங்கட்டித் தமிழ்
மரபொன்றும் பிடிக்காதே
என்னென்றுசொல்லி என்
ஏக்கத்தைத தீர்ப்பேன்

பெண்ணெண்று பிறந்தது
உனக்கே பிடிக்காதே
விண்வெண்று வாழவே உன்விரல்தெட்டேன்
அடடா உனக்குத்தான் முன்னீன்று
தாங்கிடும் முயற்சிகள் பிடிக்காதே

கஸ்டத்தை தாங்கியுன்
இஸ்டத்தை வாங்கினேன்
அடடா உனக்குத்தான் கஸ்டப்பட்டுவாழ
கடுகளவும் பிடிக்காதே

பெற்றாளே ஒருத்தியெனை பெறவில்லை
ஏதும்சுகம் முற்றாயும் கொடுத்தும் முடியவில்லையே
அடடா உனக்குத்தான்
உனக்காய்நான் செத்தாலும் பிடிக்காதே...

Friday, March 11, 2011

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு!


உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவிட நாகரிகம்" என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், "பழங்கதை பேசுவதால் என்ன பயன்?" என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.

கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது. ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.

இந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு குறித்த இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.

டார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் "விடுபட்ட இணைப்பு" என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.

சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.

சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.

"சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்" என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை "இந்து மதத்தோடு" தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக்கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.

கபிலர் பாடிய இருங்கோவேள்

கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிஷம் என்றாக்கினர். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.

துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:

"இருங்கோவேளே... என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே... செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.

யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே)! இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!"

- இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.

கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,

"நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்ற வரியில் தொடங்குகிறது.

"வடபால் முனிவன்" யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.

"வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது "பெரும் மண் பாண்டத்தில் தோன்றி" என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, 'ஓமகுண்டத்தில்' என்று தவறாகப் பொருள் கூறினர். 'தட' என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் 'தட' என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.

வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.

துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.

கண்ணன் தமிழன்

நச்சினார்க்கினியரின் குறிப்பிற்கும் கபிலரின் பாடலுக்கும் நேரடி உறவே உள்ளதைக் கவனிக்கலாம்.

அதாவது, துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், "வடபால் முனிவர் தடவினுள் தோன்றி" என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு. அக்கால, சிந்துவெளி எழுத்துக்கள் சித்திர வகைப்பட்டவை. சித்திரங்களின் வழிதான் அவர்கள் மொழியைப் பதிவு செய்தார்கள். அதன்படி, மண்பாண்டம் அல்லது கும்பம் என்பது அகத்தியரைக் குறிக்கும் என்பது முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆய்வு முடிவு.

இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களின் நகரங்களை அழித்தொழித்த ஆரியர்கள், அடுத்ததாக கங்கைச் சமவெளிக்கு வந்தார்கள். அங்கே இருந்த நகரம் துவரை என்பதாகும். அதாவது, இன்றும் துவாரகா எனப்படும் நகரமே அக்கால துவரை. துவரையின் மன்னன் கண்ணன். கண்ணனைப் பற்றிய குறிப்பை, ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் பதிவு செய்துள்ளது. பாகவதம், கண்ணனை 'தாச யாதவன்' என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது என்ற கருத்தை ஆய்வாளர் கோசாம்பி முன் வைத்துள்ளார். (சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு) ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். இந்தக் கண்ணன் ஆண்ட நகரம் துவரை!

கண்ணன், தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னன் என்பது இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. கண்ணனது படைகளுடன் ஆரிய இந்திரன் படைகள் போரிட்டுத் தோற்றதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதம் கூறுகிறது.

"கண்ணன் கருப்பு நிறத்தவன் தாச இனத்தவன். அவனுக்கும் ஆரியருக்கும் போர் நடந்தத் ஆரியர் தலைவன் இந்திரன்" ஆகிய தகவல்களை ஆரியரின் வேதங்களே ஏற்றுக் கொள்கின்றன. ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவானது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.

அகத்தியர், அக்கால அறிவாளர்களில் தலைமைத்துவம் வாய்ந்தவர். தமிழரின் பேரரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அகத்தியரை ஆரிய முனிவர் என்று, ஆரிய வேதங்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின. அவை, அகஸ்தியர் என்று அவரை அழைத்தன. ஆய்வறிஞர் டி.டி.கோசாம்பி, அகத்தியரை சிந்துவெளியோடு தொடர்புடையவராக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். (பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு).

அகத்தியரோடு தொடர்புடைய 'தட' குறித்து கோசாம்பியும் விளக்கியுள்ளார். தட என்பது மண்பாண்டத்தைக் குறிக்கும் எனக் கண்டோம். மண்பாண்டம் என்பது, பொருண்மையான சொல். நடைமுறையில் - அகத்தியரைக் குறிக்கையில், இது கும்பம் ஆகும். அதாவது, அகத்தியரின் சின்னம் கும்பம். கும்பம் என்பது கருப்பையின் குறியீடு என்கிறார் கோசாம்பி. பண்டைய பண்பாடுகளை ஆய்பவர்களுக்கு குறியீட்டு மொழி விளங்க வேண்டும். இது அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆகும். ஏனெனில், அக்கால மக்கள் தமது பண்பாட்டு நடவடிக்கைகளை உரைநடையாக எழுதவில்லை. புனைவுகளாகத்தான் பதிவு செய்தனர். இன்று உள்ளது போல, மொழியின் எழுத்துரு வளர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆகவே, குறிப்பிட்ட கருத்தை அவர்கள் ஏதேனும் குறியீடாக வரைந்து வைத்தனர். சான்றாக, தாமரை இதழ்கள், பிளந்த மாதுளைப் பழங்கள் ஆகியவை, பெண்ணின் பிறப்பு உருப்பைக் குறிக்கும் குறியீடுகள். இது போலவே, கும்பம் என்பது கருப்பையின் குறியீடு.

அகத்தியரின் குறியீடு கும்பம் என்பதால், அவரது பிறப்பு ஏதோ ஒரு தாய் தெய்வ வழிபாட்டுச் சமூகத்துடன் தொடர்புடையது என்ற கருத்தைக் கோசாம்பி முன்வைக்கிறார். சிந்துவெளித் தமிழர் தாய் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆரியர், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகவே, அகத்தியர் சிந்துவெளியோடு நெருங்கிய உறவு கொண்ட தமிழரே, என்பதை உறுதிபடக் கூறலாம்.

மீண்டும் கண்ணனிடம் வருவோம். நச்சினார்க்கினியார் குறிப்பில் வரும் வேளிரை கண்ணன் ஏன் தென்னாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கேள்வி இயல்பானது. மேலும், அவ்வாறு அனுப்பப்பட்ட வேளிர் குலத்தவர் எருமை நாட்டில் ஆட்சி செய்யும்போது, அங்கும் ஒரு நகரத்துக்கு துவரை என ஏன் பெயரிட வேண்டும் என்ற கேள்வியும் தவிர்க்க இயலாதது.

ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான். இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள். அவனிடமே கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது, அவனது குலப் பெருமையாக, "நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றார். இதுவே விடையாக இருக்க முடியும்.

இந்தக் கூற்றை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று உள்ளது. கபிலரே அந்தச் சான்றையும் விட்டுச் சென்றுள்ளார்.

அழிந்த நகரங்கள்

இருங்கோவேள், பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கபிலர் அவனை நோக்கிப் பின்வருமாறு பாடினார்

"உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு" என்கிறார் கபிலர். (புறநானூற்றில் சில பாடல்களை இயற்றிய கழாத்தலையார் வேறு. கபிலர் குறிப்பிடும் கழாத்தலையார் வேறு)

இருங்கோவேளின் முன்னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் "நீடுநிலை அரையத்துக் கேடு" என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.

மேலும், கபிலர் பாடலில் உள்ள நகரங்கள் வடக்கே இருந்தவைதான் என்ற கருத்தில் நிற்கின்றன. ஆகவே, வேளிர் குலத்தவரின் முன்னோர் சிந்துவெளியில் அரசாண்டவர்கள் என்பதும், அவர்களது நகரங்கள் அழிக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.

வேளிர் என்பது, வேளாளர் என்பதன் முந்தைய சொல். வேளிர் குலத்தவர், வேளாண் குடியினர் ஆவர். வேளாளர் / வேளிர் என்ற சொல், எந்தச் சாதியையும் குறிக்கவில்€ல் அக்காலத்தில் சாதி அமைப்பும் நிலவவில்லை.

சிந்துவெளியின் முக்கியத் தொழில் வேளாண்மையே ஆகும். சிந்து ஆற்றின் குறுக்கே சிந்துத் தமிழர் அணைகள் கட்டி வேளாண்மை செய்தனர். அந்த நாகரிகம் ஆரியரால் அழிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய வேளிர் குலத்தவர், துவரையை ஆண்ட கண்ணனிடம் வந்திருக்க வேண்டும். கண்ணன், கால்நடைச் சமூகத் தலைவன். பண்டைய ஆரியப் பாடல்கள் கண்ணனை, 'தாச யாதவன்' என்கின்றன.

கண்ணன், வேளிருக்கு உதவி செய்து அகத்தியருடன் அவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழகம் வந்த வேளிர் குலத்தவர், எருமை நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த காட்டை அழித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டு, அரசு அமைத்திருக்க வேண்டும். கண்ணன் ஆண்ட துவரை நகரிலிருந்து வந்ததால், பன்னிரு வேளிரும் தமது புதிய நகரத்துக்கும் "துவரை" என்றே பெயரிட்டிருக்க வேண்டும்.

இந்தக் கருத்துக்களையே கபிலர் பாடல்களும் பிற அறிஞர் ஆய்வுகளும் உணர்த்துகின்றன.

தமிழின் மிகத் தொன்மை வாய்ந்த அறிவாளரான அகத்தியர் இயற்றிய நூல் "அகத்தியம்" என்பதாகும். தொல்காப்பியத்துக்கும் முந்தையதான அந்நூல் அழிந்து விட்டது. சித்தர் மருத்துவ அறிவியலின் தந்தை அகத்தியரே ஆவார். எருமை நாட்டில் வேளிரை அரசாளச் செய்த அகத்தியர், வேளாண் விளை நிலங்களை உருவாக்க காவிரி ஆற்றிலிருந்து கிளைகளை வெட்டும் திட்டத்தில் பங்காற்றியிருக்க வேண்டும். "அகத்தியர்தான் காவிரி நீரை உருவாக்கினார்" என்ற கதை நீண்ட காலமாக நிலவுகிறது. இக்கதை புராணங்களின் வடிவில் கூறப்படுவதாலேயே புறக்கணித்துவிடக் கூடாது.

பொதுவாகவே, புராணங்களின் கற்பனைகளுக்கு இடையே வரலாற்று உண்மைகள் மறைந்தும் திரிந்தும் இருக்கும். ரிக் வேதத்தின் மந்திரங்களின் வழியேதான், சிந்துவெளித் தமிழரின் ஆரிய எதிர்ப்புப் போரை அறிந்து கொள்ள முடிகிறது. இலியட், ஒடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களின் கற்பனைக் கதைகளின் ஊடாகவே கிரேக்க வரலாறு எழுதப்பட்டது.

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவில் இந்தக் குறிப்புகள் பல புதிய ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றன என்பதை உணர முடிகிறது.

சிந்துவெளிப் பண்பாட்டின் உன்னதமான கூறுகளை, மடை மாற்றி இந்துப் பண்பாட்டுக்குள் அடைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடக்கின்றன. உண்மையில், இந்துத்துவம் எனும் தத்துவத்தின் ஆரிய மூலத்தை எதிர்த்தவர்களே சிந்துவெளித் தமிழர். இன்றும் இந்துத்துவத்தைத் தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் எதிர்க்கும் இனமாக தமிழ் இனமே உள்ளது. இந்த முரண்பாட்டை, ஆரியமயப்படுத்தவே ஆரியம் தொடர்ந்து முயற்சிக்கிறது. அகத்தியரை, ஆரிய முனிவர் ஆக்கியது போல, சிந்து வெளியையே, இந்துப் பண்பாட்டின் சின்னமாக மாற்றத் துடிக்கிறது ஆரியம்.

முனைவர் ஐராவதம் மகாதேவன், தமது ஆய்வின் முன்னுரையில், சிந்துவெளியில் இருந்த நீச்சல் குளத்தை, "இன்றைய இந்துமதக் கோயில் குளங்களின் முன்னோடி வடிவம்" என்கிறார். சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே, இவ்வாறான பிழையான / உள்நோக்கமுள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும். தமிழிய ஆய்வுலகம் இது போன்ற சதிகளை முறியடித்து வெற்றிகாண வேண்டும். தமிழ் இன உணர்வாளர்கள் தமிழிய ஆய்வுலகை ஆதரிக்க வேண்டும்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

புதுவைக் கவியான பாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார். தமிழ், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர். புதுவை அரசியலார் கல்லூரியில் தமிழாசிரியராப் பணியாற்றியவர். புரட்சிக் கனல் தெறிக்கும் இவர் பாடல்கள், தமிழர் வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பன. குடும்ப விளக்கு, குறிஞ்சித்திட்டு, பாண்டியன் பரிசு முதலான பல கவிதை நூல்களை இவர் படைத்துள்ளார்.

புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார். இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார்.

1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது.

கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாமெனும் நினைவா?
உலகாளஉ னது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்!
உதவாதினி ஒரு தாமதம்
உடனேவிழி தமிழா!
- பாரதிதாசன்

பெண் கல்வி' சுதந்தரத்திற்கு முன்னும், பின்னும்!


திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விசயம்தான். அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வரலாற்றின் பக்கங்களாக இருந்தாலும் சரி. இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இன்று மகளிர் தினம் கொண்டாடும் வேளையில் தாய்நாடாம் இந்திய நாட்டின் 64வது சுதந்திர தினம் தலைநகர் டெல்லியில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டதை நாம் திரும்பிப்பார்த்தால் அந்த காட்சி நம் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது என்பது நிதர்சனம். அதிலும் எந்த கட்சியின் சாயத்தையும் பூசிக்கொள்ளாத பெண்களாகிய நமக்கு, நம் தேசத்தின் ஜனாதிபதியான திருமதி. பிரதிபா பாட்டீல், அரசாளும் கட்சியின் தலைவரான திருமதி. சோனியா காந்தி, சபாநாயகரான திருமதி. மீரா குமார் போன்ற பெண்கள் அனைவரும் இவ்விழாவில் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது இல்லையா? கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் நாட்டுப் பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் 'கல்வியே' என புலப்படும். 'கல்விக்கண்' என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வியே நம் மக்களின் கண்களைத் திறந்தது எனக் கூறலாம். நம் தேசத்தின் பிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தி இதனை நன்கு உணர்ந்ததினால் தான் "ஒரு ஆண் மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்திலுள்ள ஒரு பெண் கல்வி கற்றால் முழுக் குடும்பமும் நன்மை பெற்றுக்கொள்ளுகிறது. சமுதாயத்திலுள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்றுக்கொள்ளும் போது, சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது; அதிநிமித்தம் தேசம் வளர்ச்சி அடைகிறது" எனக் கூறினார்.

சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என நாம் ஆராய்ந்து பார்த்தால் ஆண்களுக்கு எப்பொழுதும் உயர்வான அல்லது தலைமை இடங்கள் அளிக்கப்பட்டது. ஆனால், பெண்களுக்கோ அடிப்படை வசதிகளும், உரிமைகளும்கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட காலங்களுமே அதிகமாக ஆதிக்கத்திலிருந்ததை சரித்திரத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பெண்களுக்குக் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டது. 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும் உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் தான் நம் நாட்டின் முதல் பெண் டாக்டராக திருமதி. முத்துலட்சுமி ரெட்டி என்பவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பெண் டாக்டராகப் பயிற்சி பெற்று சரித்திரம் படைத்தார். பின்னர் அரசின் உதவித் தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி (தென்னிந்தியப் பெண்மணி) என்ற பெருமையும் இவரை சேரும். பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத அரசாங்கம் அக்கால கட்டத்தில் பெண்கள் கல்வி கற்றே ஆக வேண்டும் என்று எண்ணியதற்குக் காரணங்கள் உண்டு. அறியாமை என்னும் இருட்டில் வேதனையுடன் காலங்கழித்த பெண்கள் சிந்திக்கவும், செயல்படவும், ஏதுவான கல்வி இல்லாமையினிமித்தம் உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பெண்சிசு கொலை, தேவதாசி வாழ்க்கை போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளாகி அடிமைகளாக வாழ்ந்த அக்காலக்கட்டத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், வீறு கொண்டு எழுந்ததிநிமித்தமே அரசாங்கம் அவர்களை ஊக்குவித்து, வெளிநாடு சென்று கல்வி பயிலுவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. சென்னையிலுள்ள 'அடையாறு புற்றுநோய் மருத்துவமனை' இவரால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் தோன்றிய காலத்தில் பெண்களுக்கும் அவைகளைக் கற்றுக் கொடுத்தனர். பின்னர் பெண்களுக்கு அக்கல்வி மறுக்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் நம் நாட்டை அரசாண்ட காலத்தில் பெண்களுக்குக் கல்வியறிவைப் புகட்டுவது மிகவும் அவசியம் என அவர்களால் வலியுறுத்தப்பட்டதின் நிமித்தமும், நம் நாட்டின் சமுதாயப் புரட்சியாளர்கள் எனக் கருதப்பட்ட ராஜாராம் மோகன்ராய், சந்திர வித்யாசாகர், ஈ.வே.ரா. பெரியார், அம்பேத்கர், ஃபுளே (Phule) போன்றவர்களின் விடாமுயற்சி மற்றும் எழுச்சியூட்டும் கருத்துகளினாலும், பெண்களுக்கு கட்டாயக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

சுதந்திரம் பெற்ற பின்னர் நம் அரசாங்கம் எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகளிநிமித்தம் பெண் கல்வி உயிர்மீட்சி அடைந்தது, அதனால் ஆண்களின் கல்வி வீதத்தைக் காட்டிலும் பெண்களின் வீதம் அதிகரித்திருப்பதை 1971, 2001ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. 22% விழுக்காடாக இருந்த பெண்களின் கல்வி 2001ஆம் ஆண்டில் 55%ஆக அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று, அதாவது ஆண்களின் கல்வி வளர்ச்சி 11.72 சதவீதம் என்றும் பெண்களின் கல்வி வளர்ச்சி கிட்டத்தட்ட 15%ஆகவும் அதிகரித்துள்ளதை இக்கணக்கீடு நமக்குத் தெரிவிக்கின்றது. இந்நாட்களில் அநேக வீடுகளில் தாய்மார்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் கல்வியைக் குறித்து கரிசனைப்படுவதால்தான் எதையும் விற்றாவது அவர்களுக்குக் கல்விச் செல்வத்தைக் கொடுக்கும்படி ஓடியாடி அலைவதை நாம் காண முடிகிறது. இவர்களுடைய அறிவுக் கண்கள் திறக்கப்பட்டதால் தானே தனக்குப் பின் வரும் சந்ததியும் அறிவுச் செல்வங்களாக வாழ வழி செய்கிறார்கள்!

நம் நாட்டில் தலைசிறந்து விளங்கின பல பெண்மணிகளே இதற்குச் சான்றாவார்கள். இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற அந்தஸ்தைப் பெற்ற திருமதி. சரோஜினி நாயுடு முதல் பெண் UNO பிரசிடெண்ட் விஜயலட்சுமி பண்டிட், பிரதமர் இந்திரா காந்தி, பச்சேந்திரி பால் (Bachendri Pal) என்னும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி, முதல் பெண் நீதிபதியான ஃபாத்திமா பீவி மற்றும் விண்வெளியில் வெற்றி கண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், விளையாட்டு வீராங்கனை P.T. உஷா, ஷைனி போன்ற பல பெண்மணிகள் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல; பெண்களால் எல்லாம் முடியும் என நிரூபித்துள்ளனர். இன்று அனைத்துத் துறையிலும் சென்று தங்கள் திறமை, கடின உழைப்பு, மற்றும் சாதுரியத்தினால் வீட்டை மட்டுமின்றி அலுவலகம், தொழிற்சாலை, நீதிமன்றம், கல்வித்துறை, அரசாங்கம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதன் காரணம் அவர்களது படிப்புத் திறன்தான் என்பதில் ஐயமில்லை. அரசியலிலும் (நாடாளுமன்றம் மற்றும் பாராளுமன்றம்) பெண்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறதைக் காண்கிறோம். பெண்களின் 33% இடஒதுக்கீடே இதற்குச் சான்றாகும்.

படிப்பறிவு எனும் தீ நம் நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் பறந்து, பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு கீழ் வரும் சம்பவம் ஒரு உதாரணம்: அதாவது மிகவும் பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்குக் கட்டாயக் கல்வி கொடுக்கப்பட்டதிநிமித்தம் வீட்டினுள் அடைபட்டிருந்த பெண்கள் வெளிவந்து மிதிவண்டி (Cycle) ஓட்டக் கற்றுக்கொண்டு 'கல் உடைக்கும் தொழிற்சாலைகளை' அவர்களே நிர்வாகம் பண்ணுமளவிற்கு உயர்ந்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் வாழும் பெண்களாகிய நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் எனக் கூறினால் அது நமக்குக் கிடைத்திருக்கிற 'கல்வியறிவே'. வீட்டிலும் சமுதாயத்திலும் நாட்டிலும் பெண்களின் திறமையை அறிந்து பதவிகளைக் கொடுத்து கௌரவிக்கப்படுகிறார்கள். அதற்குச் சான்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை பார்லிமெண்டில் நிறைவேற்றியது ஆகும்.

மற்றவர்களுக்கு ஒளிவீசும் தன்னலமற்ற கலங்கரை விளக்கமாக ஒரு பெண் தன் கல்வி அறிவினால் தன் வீட்டாருக்கு மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அறியாமை என்கிற இருட்டை அகற்றி வெளிச்சமடையச் செய்வாள்